பொருத்தமற்ற மதகுகளால் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு

-யாழ் நிருபர்-

நவாலி தெற்கு கலையரசு வீதியில் பொறுப்பற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள பொருத்தமற்ற மதகுகளை பொதுமக்களின் போக்குவரத்து பாவனைக்கு ஏற்ற வகையில் உடனடியாக அமைத்து தருமாறு குறித்த பிரதேச மக்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட நவாலி தெற்கு கலையரசு வீதியில் சிறிய வடிகால் அமைப்பு முறை ஏற்கனவே காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதியின் மழை நீர் குறுக்கே பாயும் இரண்டு பகுதிகளில் மதகுகளை அமைக்க பிரதேச சபை நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து ஒப்பந்ததாரர்களால் வீதியின் மதகு அமைக்கப்பட்ட பொழுது நீர் பாயும் கொள்ளளவை விட ஆழமாக மதகு வெட்டப்பட்டது. பிரதேச மக்கள் விசனம் வெளியிட்ட பொழுதிலும் அதனை கருத்திற் கொள்ளாது தரைத்தோற்றத்தை விட மிக உயரமாக மதகு அமைக்கப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக பொதுமக்கள் பயணிப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு இருந்து.

இதனை தொடர்ந்து பிரதேச சபையினால் வீதியின் தரைமட்டத்தில் இருந்து உயரமாக அமைக்கப்பட்ட மதகிற்கு கிரவல் மண் பரப்பபட்டது. இதன் காரணமாக கனரக வாகனங்கள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், மாற்று திறனாளிகள் என பலர் குறித்த வீதியின் முறையற்ற கட்டுமானத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபைக்கு பிரச்சினையை கூறினால் கடித்ததுடன் வருமாறு கூறுகின்றனர்.

மேலும் இதுவரையில் ஒப்பந்ததாரர்கள் செய்த வேலை சரியானதா சீராக முடிக்கபட்டுள்ளதா என சபையினர் வருகை தந்து பார்க்கவில்லை .

எனவே வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அதன் செயலாளர் உட்பட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் வெகு விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.