பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மனு தாக்கல்

நிதி அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நாணயச் சபை, மத்திய வங்கியின் ஆளுநர், மின்சார சபை மற்றும் அரசாங்க நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கு எதிராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.

தற்போதைய நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது 2016ஆம் ஆண்டு முதல் பலமுறை கடிதங்களை அனுப்பிவைத்துள்ள போதிலும் அது தொடர்பில் எவ்வித நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதுவே தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை தவிர்ப்பதற்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 200 மில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு நிதி அமைச்சர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

மேலும் மின்சார உற்பத்தியை துரிதப்படுத்தவும், எரிபொருளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் அதன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.