
பூமியை நெருங்கும் ஆபத்து: நாசா எச்சரிக்கை
பூமியை நோக்கி சுமார் 65,000 கி.மீ., வேகத்தில் சிறுகோள் ஒன்று வருவதால், அது பூமியில் மோதினால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நமது பூமியைத் தாண்டி விண்வெளியில் ஏராளமான விண்வெளிப் பாறைகள் இருக்கின்றன. அந்த பாறைகள் குறிப்பிட்ட அளவில் சூரியன் அல்லது வேறு கிரகங்களை சுற்றி வரும்போது அவற்றை சிறுகோள் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில், 2024 MT1 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று மணிக்கு 65,215 கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.
சுமார் 260 அடி விட்டம் கொண்ட இந்த சிறுகோள், அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட பெரியது என்றும், இந்த சிறுகோள் சுமார் 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் வரும் ஜூலை 8ஆம் திகதி பூமிக்கு மிக அருகிள் வரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் என்றாலும், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும்.
பூமிக்கு அருகில் சிறுகோள்கள் மற்றும் வால்மீன்களை கண்காணித்து வரும் நாசா, இந்த சிறுகோளான 2024 MT1 பூமியை நெருங்கி வருவதை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த சிறுகோள் பூமி மீது மோதுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றாலும், ஒருவேளை பூமியுடன் மோதினால் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாசா எச்சரித்துள்ளது.
இதனிடையே, பூமியை நெருங்கி வரும் 2024 MT1 சிறுகோளின் படங்களையும், தரவுகளை சேகரிக்க உலக அளவில் இருக்கும் வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தயாராகி வருகின்றனர். இதுபோன்ற சிறுகோள்களை தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதன் மூலம் ஆரம்ப கால சூரிய குடும்பம் மற்றும் கிரகங்களின் தோற்றம் பற்றிய விவரங்களை பெறலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்