புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவிப்பு
இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அதாவது புத்திழையப் பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை புற்று நோய் எனப்படும்.
இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன நோய் என்று பெயரிடப்படுகின்றது.
இவ்வாறு காலங்காலமாக மனித குலத்தையே அச்சுறுத்தும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக, ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சு நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேன்சர் எனப்படும் புற்றுநோயைக் குணப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் RNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரஷ்ய ஜனாதிபதி புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.
இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று தெரிவித்துள்ளார்.
இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இது வேக்சின் ஊசி வடிவில் வழங்கப்படுமா அல்லது எப்படி செயல்படும்? என்ன தொழில்நுட்பம்? என்ற விளக்கத்தை புடின் வழங்கவில்லை.
தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே செல்லும் அதே வேகத்தில் மனிதர்களிடையே புற்றுநோயாளர்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் புற்று நோய்க்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
சில மருந்துகள் புற்று நோய்க்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும் முழுமையாக புற்று நோயை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபி முறை தான் புற்றுநோய்க்கு எதிரான முக்கிய சிகிச்சை முறையாக இருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவில் புற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனையின் போது புற்று நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது.
சோதனையில் கலந்து கொண்ட அனைத்து புற்று நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள மெமொரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்செர் சென்டெர் ( Memorial Sloan Kettering Cancer Center) மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை புற்று நோய்க்கு எதிராக செய்துள்ளது.
புற்றுநோய் செல்களை அகற்றுவதற்கான ஒரு புதிய முறையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் சில மூலக்கூறுகளை அதிர வைத்து அந்த அதிர்வை வைத்து புற்று நோய் செல்களை கொல்லும் மருத்துவத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் தான் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளமை அனைத்து உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்