புதிதாகப் பணம் அச்சிடப்பட்டதா? மத்திய வங்கியின் அறிவிப்பு
புதிதாகப் பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கி, திறந்த சந்தை செயற்பாடுகள் மூலம் 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணத்தைப் புழக்கத்துக்கு வழங்குவது மத்திய வங்கியின் ஒரு சாதாரண நடவடிக்கையாகும்.
திறந்த சந்தை நடவடிக்கைகள் மூலம், வட்டி விகிதங்களை நிர்வகிப்பதன் ஊடாக விலை ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதற்கான செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
அதனைப் பணம் அச்சிடல் என்று வரையறுக்க முடியாது.
எனவே, அரசாங்கத்தின் பாதீட்டுக்கு நிதியளிப்பதற்காகப் பணம் அச்சிடலோ அல்லது முறையற்ற விதத்தில் பணத்தைப் புழக்கத்தில் விடும் செயற்பாடோ இடம்பெறவில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது.