பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணம், பணி நிறுவனத்திற்கு இஸ்ரேல் தடை
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்திற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
இதன்படி, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதிக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனம் செயற்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.
குறித்த சட்டத்தை மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றுவதற்குத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணியாளர்களுக்கும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையானது காசா மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குட்பட்ட மேற்குக் கரையில் செயல்படும் நிறுவனத்தின் திறனைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தின் பணியாளர்களுக்கு இனிமேல் இஸ்ரேலுக்குள் உத்தியோகப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தின் தலைமையகம் மூடப்படவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.