பாடசாலை நேரத்தை அதிகரிக்க வேண்டாம் : கல்வி அமைச்சிடம் வேண்டுகோள்

-யாழ் நிருபர்-

நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதோ அல்லது அதிகரிப்பதோ பொருத்தமானது அல்ல.

இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

போக்குவரத்து கட்டண அதிகரிப்பு உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு எனும் மோசமான சூழ்நிலைகளுக்காக மக்கள் பேதமின்றி வீதியில் இறங்கிப் போராடிவருகின்றனர்.

இதில் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏன் மாணவர்களும் இணைந்துள்ளனர்.

இத்தகையதொரு சூழ்நிலையில் பாடசாலையை அரைமணிநேரம் அதிகரிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.

ஒரு காலத்தில் இரு நேரப்பாடசாலையாக நடைபெற்றபோது மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் மாணவர்களுக்கான சத்துணவு, மதிய உணவு என்பன வழங்கப்பட்டன.

இப்போது எல்லாமே நிறுத்தப்பட்டு விலைவாசியை பன் மடங்காக அதிகரித்து மக்களை சித்திரவதை செய்து  ஏதோ மாணவர்களின் கல்வியில் அக்கறை உள்ளவர்கள்போல் பாசாங்கு செய்வது வேடிக்கையாக உள்ளது.

இவை எவையுமே இலங்கை நாட்டில் சாத்தியப்படாது என்பதனை கோடிக்கணக்கான மக்களும் உணர்ந்துவிட்டனர்.

ஆகையால் பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் திட்டத்தை நிறுத்தி போசாக்கான சமூகம் உருவாக வழிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம், என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்