பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை

சவூதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பாடசாலைக்கு எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பாடசாலைக்கு வரவில்லை என்றால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்புவது பாடசாலையின் பொறுப்பாகும். அந்த அலுவலகம் விசாரித்து பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். இதன்போது பெற்றோர் அலட்சியத்தால் மாணவர் பாடசாலைக்கு வராதது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2ஆவது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும்.

10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3ஆவது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் கல்வித்துறை மூலம் வேறு பாடசாலைக்கு மாற்றப்படுவார்.

இதனை தொடர்ந்து 20 நாட்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காததன் பின் கல்வித்துறை பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கையை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.