பருத்தித்துறை மரக்கறி வர்த்தகர்கள் பகிஷ்கரிப்பு : பூட்டு போட்டு பூட்டிய மாநகரசபை செயலாளர்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறிச் சந்தைக்கு பருத்தித்துறை நகரசபையால் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறி சந்தையை, சுமார் 200 மீற்றர்கள் தொலைவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மரக்கறி வியாபாரிகள் வியாபாரத்தை பகிஷ்கரிப்பதாக அறிவித்திருந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து சந்தை கட்டிடம் நகரசபையால் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாபாரிகள் தமது பொருட்களை பழைய சந்தைக்குள்ளிருந்து வெளியே எடுத்துவர முடியாத நிலையில் உள்ளனர், இதேவேளை ஒரு சில மரக்கறி வர்த்தகர்கள் புதிய சந்தை கட்டிட தொகுதியில் வியாபாராத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய சந்தைக்கு மரக்கறி வியாபாரத்தை மேற்கொள்ளுமாறு, சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை நகரசபையால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து மரக்கறி வர்த்தகர்களால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கும் எதிர்வரும் 20/06/2025 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே பருத்தித்துறை நகரசபையால் நேற்றையதினம் திடீரென சுவரொட்டி மூலமும், ஒலிபெருக்கி மூலமும், மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டமையால் அதிகமான மரக்கறி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதுடன், ஒரு சில வர்த்தகர்கள் புதிய கட்டிட தொகுதியில் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய மரக்கறி சந்தை அமைந்துள்ள பகுதி, தற்போதுவரை இயங்கிவந்த சந்தையிலிருந்து சுமார் 200 மீற்றர்கள் தொலைவில் உள்ளது, அது ஒரு ஒருவழிப்பாதை ஆகும், அவ் வீதியால் மீன்சந்தைக்கு செல்கின்றபோது போக்குவரத்து நெரிசல், தரிப்பிட வசதி குறைவுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க