பரீட்சை மண்டபத்தில் கைபேசிகளை பயன்படுத்துவது தொடர்பான அறிவித்தல்!

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களுக்குள் கைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கான தேவை உள்ளதால் மாத்திரமே அவர்களுக்கும் கைபேசி பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிக பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் கைபேசிகளை பரீட்சை பயன்படுத்த முடியும் முன்னதாக பரீட்சை மண்டபத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கைபேசிகளை பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இந்தமுறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்ட உதவி பொறுப்பதிகாரிகள் அல்லது கண்காணிப்பாளர்கள் கைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பரீட்சை காலங்களில் அனர்த்தங்களால் பாதிக்கப்படும் பரீட்சார்த்திகளுக்கான வசதிகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன முதல் ஆறு நாட்களுக்குத் தேவையான வினாத்தாள்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையானது 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது, இந்த முறை குறித்த பரீட்சைக்காக 333,183 பேர் தோற்றவுள்ளனர்.

அவர்களில் 253,380 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,795 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர். உயர்தரப் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு ஏலவே தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தற்போது, கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகளுக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.