பண்டாரவளை விடுதியில் பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் கைது

-பதுளை நிருபர்-

பண்டாரவளை விடுதி ஒன்றில் 40 வயதுடைய எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 3.30 மணியளவில்  பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கெளனி கோணவலை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எட்டாம்பிடி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரை பண்டாரவளை விடுதி ஒன்றுக்கு வரவழைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருந்த சந்தேக நபர் விஷமருந்தி கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் களுபஹன மற்றும் பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த திஸாநாயக்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய பண்டாரவளை பொலிஸ் குழுவினர் கொழும்புக்கு சென்று வைத்தியசாலையில் வைத்து சந்தேக நபரை கைது செய்து இன்று அதிகாலை பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்