படகுகளின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறே தாமதத்திற்கு காரணம் – கிரான் பிரதேச செயலாளர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு கிரான் பாலம் வெள்ளத்தினால் மூடப்பட்டு போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில், முறுத்தன்ன கோராவெளி போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து செய்ய முடியாமல் பரிதவித்த மக்கள், அவரவர் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கிரான் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கிரானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதும், பிரதேச செயலகம் தமக்கு உரிய உதவிகளை வழங்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்

இவ்விடயம் தொடர்பில் கிரான் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கே.சித்திரவேலிடம் வினவிய போது,

குறித்த பகுதியில் மக்களின் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக இராணுவத்தினரின் படகு சேவை ஒன்றும் எமதுபிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் படகுச்சேவை இரண்டும் என மூன்று படகுச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றும் மக்களுக்கான படகுச்சேவைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட்டு கொண்டு தான் இருந்தது, எனினும் எம்முடைய இரண்டு படகுகளினதும் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை திருத்துவதற்காக அனுப்பப்பட்டு, அவை மீள வர சற்று காலதாமதம் ஆனது, அவ்வேளையிலேயே இவ்வாறான ஒரு குழப்பநிலை ஏற்பட்டது.

மேலும், மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் தான் இந்த படகுச்சேவையை பயன்படுத்த முடியும், அத்துடன் ஒரு படகில் ஒரே தடவையில் 6 பேர் வரையில் தான் பயணிக்க முடியும், எனவே இவ்வாறான அனர்த்த சூழ்நிலைகளின் போது மக்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிது அவசியமாகும், என தெரிவித்தார்.

மேலும் முன்னதாக அவ்விடத்தில் காத்திருந்த மக்கள் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கிரான் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்