நோயுற்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரன்

மஹதிவுல்வெவ தெவனிபியவர பகுதியில் நோயுற்ற நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 47 வயதுடைய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயது உடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளான்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் உட்பட பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அயல் வீட்டுக்காரர் கூட்டாக இணைந்து குறித்த பெண்ணின் வீட்டில் மது அருந்திவிட்டு, மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக்கச்சேரி நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது மது அருந்திய வீட்டுக்கு மீண்டும் வந்த சந்தேக நபர், நோயுற்ற நிலையில் இருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், தனது விருப்பத்துக்கு இணங்காத பட்சத்தில் பெண்ணை தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.