நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய யாழ் இளைஞர் ஒருவருக்கு மலேரியா காய்ச்சல்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில் இருந்து திரும்பி வந்ததாகவும், இந்நிலையில் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு மலேரியா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டில் இருந்து வருவோர் காய்ச்சலுக்கு ஆளானால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும், மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.