நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை: நிஹால் அஹமட் தெரிவிப்பு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள், பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் சாத்தியங்கள் ஏதும் தென்படவில்லை என காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் கைறுதீன் நிஹால் அஹமட் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினர் சார்பாக, சுனாமித் தாக்கம் ஏற்பட்டு 20 ஆவது வருட நினைவு நாளான நேற்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்டச் செயலாளரைச் சந்தித்தபோது வீடுகள் விரைவில் பயனாளிகளிடம் வழங்கப்படாது எனும் நிலைமைகளை அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
“சவூதி அரசாங்க நிதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள வீடுகளை சுனாமியால் பாதிப்புற்றோருக்கு வழங்கக்கோரி இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம, திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி. அனீஸ் ஆகியோருடன், சுனாமியால் பாதிக்கட்டவர்களை உள்ளடக்கிய காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி சந்திப்பு ஒன்றை நடத்தியது.
சந்திப்பில், அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினைகள் உள்ளடங்கிய ஆவணம், கரும்பு விவசாயிகளின் நிலம் பறிக்கப்பட்டுள்ளமை, அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட விரிவான ஆய்வு ஆவணங்களும் மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
மகஜர் நியாயமானது என தெரிவித்த மாவட்டச் செயலாளர் தனது நிலைப்பாடு தொடர்பில் சந்திக்கச் சென்ற காணியிழந்தோர் குழுவினரிடம் தெளிவுபடுத்தினார்.
“2009ஆம் ஆண்டு சுனாமி நுரைச்சோலை வீட்டுத் திட்ட வீடுகளையும் அதன் உட்கட்டுமானங்களையும் பயனாளிகளுக்கு வழங்க ஆயத்தமானபோது தீகவாபி பௌத்த தேரருடைய தலைமையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தேரருடைய தலைமையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாகவும் வீட்டுத் திட்டத்தைக் கையளிப்பதில் தொடர்ந்தும் சிக்கல்கள் நிலவுகின்றது.
கடந்த 2024.12.20ஆம் திகதியும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க என்னை அழைத்து இது தொடர்பில் கேட்டறிந்தார். வழக்கு தீர்ப்பை மீறி செயற்பட முடியாத நிலை உள்ளதைப்பற்றி கலந்துரையாடப்பட்டது.
சுனாமியால் பாதிப்புற்ற முஸ்லிம்களுக்கு வழங்கவேண்டும் என்றே சவூதி அரசு இவ்வீடுகளை நிர்மாணித்துத் தந்தது. இப்போதும் தாமதிக்காது அவ்வீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குங்கள் என்றே சவுதி அரசு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் 500 வீடுகளை வழங்கவும் நாங்கள் தயாராகவுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வழக்குத் தீர்ப்பின்படி காணி பகிர்ந்தளிக்கும் தேசியக் கொள்கை அடிப்படையில் வழங்க கூறப்பட்டுள்ளது. தேசிய இன விகிதாசாரக் கொள்கைப்படி வழங்கத் தீர்மானித்தால் மிகச் சொற்பமான அளவே பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அது நியாயமில்லை.
அதன் காரணமாகவே இறுதியாக இவ்வீடுகளை மாவட்ட இன விகிதாசாரத்தின்படி பகிர்ந்தளிக்க நான் சிபாரிசு செய்துள்ளேன். ஆயினும் மேலிடத்திலிருந்து அதற்குரிய பதிலேதும் இன்னும் கிடைக்கவில்லை.
வழக்கினை மீண்டும் அழைக்க வேண்டும், அவ்வாறு வழக்காளிகள் மீண்டும் அழைக்கப்படும்போது அவர்களுடைய நிலைப்பாடு தொடர்பிலும் எமக்கு கூறமுடியாதுள்ளது. அவர்களுடன் சுமுகமாகப் பேச முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டதா என்பதையும் பார்க்கவேண்டும். அல்லது இன்னுமொரு மனித உரிமை மீறல் வழக்கினைத் தாக்கல் செய்து நீங்கள் நீதியைக் கோரலாம். யாருக்கும் அநியாயம் நடப்பதில் எனக்கு விருப்பமில்லை” என மாவட்டச் செயலாளர் தெரிவித்ததாக காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் நிஹால் அஹமட் தெரிவித்தார்.
மேலும்இ இங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெளிவு காண வேண்டிய பல கேள்விகள் எமக்கு எழுந்தது.உதாரணமாக, காணி பகிர்ந்தளிப்பதில் தேசியக் கொள்கை என்ன? அது பிரதேசத்தில் எவ்வாறு அமுல்படுத்தப்படும்? வீட்டுப் பிரச்சினை ஏன் காணிப் பிரச்சினையாக மாறியது? வழக்கில் எதிர்த்தரப்பு வாதம் என்னவாக இருந்தது? என்ற விடயங்கள் அலசி ஆராயப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் தன்னார்வமாக செயற்படும் ஆர்வமுள்ள சட்ட வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் அனைவரும் இணைந்து பாதிப்புற்ற மக்களுக்கு நியாயம் கிடைக்கப் போராட வேண்டியுள்ளது என்றும் நிஹால் அஹமட் வலியுறுத்தினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்