
நிலத்திலிருந்து 9 கோடி பணமும், சுவரிலிருந்து 19 கிலோ வெள்ளியும் மீட்பு
நகை வியாபாரி ஒருவரின் கடையில் வருமானத்துறை அதிகாரிகள் நடாத்திய திடீர் சோதனையின் போது நிலத்திலிருந்து, பணத்தையும் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளியையும் மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இயங்கிவரும் சாமுண்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் வருமானம் கடந்த 2019-20 நிதி ஆண்டில் ரூ.22.83 இலட்சமாக இருந்த நிலையில் மூன்றே ஆண்டுகளில் இது பன்மடங்கு அதிகரித்து தற்போதைய நிதியாண்டில் ரூ.1764 கோடியாக உயர்ந்துள்ளதை வருமானத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவற்றில் பெரும்பாலான இடங்கள் வணிகத்திற்கான இடங்களாக பதிவு செய்யப்படவில்லை.
இந்தநிலையில் கல்பாதேவி பகுதியில் உள்ள சிறிய அலுவலகம் ஒன்றில் சோதனை செய்தபோது, தரைக்கு அடியில் இருந்து கட்டுக்காட்டாக பணமும், சுவரில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளி கட்டிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
9.78 கோடி பணமும் , 19 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் , பணத்தை எண்ணுவதற்கே அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆகியுள்ளது.
கைப்பற்றப்பட்ட இடத்தின் உரிமையாளரும் குடும்ப உறுப்பினர்களும் பணம் மற்றும் வெள்ளி கட்டிகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர்.
