நான்கு மனுக்கள் வாபஸ் : களத்தைவிட்டு வெளியேறும் போராட்டக்காரர்கள்

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் பொலிஸாரின் உத்தரவுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை காலி செய்யுமாறு பொலிஸார் விடுத்த உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களை விண்ணப்பதாரர்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

காலி முகத்திடலில் உள்ள போராட்டக் களத்தை காலி செய்வதாகவும் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

முக்கிய போராட்டக்காரர்கள் இன்று புதன்கிழமை முதல் போராட்ட இடத்தை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்துள்ளனர்.

காலி முகத்திடலில் உள்ள போராட்டக் களத்தை காலி செய்வதற்கு போராட்டக்காரர்கள் கூட்டுத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதால் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.