நாக்கை கடித்ததால் கோமாவுக்கு சென்ற பெண்

பேசும்போது அல்லது சூடான உணவுகளை சாப்பிடும்போது தவறுதலாக நாம் நாக்கை கடித்துக் கொள்வது உண்டு. இவ்வாறு நாக்கை கடித்துக்கொள்வதன் மூலம் சிறு காயங்கள் ஏற்படும். சில சமயங்களில் வேகமாக நாக்கை கடித்தால் பெரிய காயங்கள் ஏற்பட்டு உணவு உண்ண முடியாத நிலை கூட ஏற்படும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயது இளம்பெண் தன்னுடைய தோழிகளுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தவறுதலாக நாக்கை கடித்து விட்டதால் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார். ஆனால் பிரச்சினை இத்தோடு நிற்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு இந்த இளம்பெண் ஆளாகி வந்த நிலையில், இறுதியாக மூச்சு விடுவதற்கே சிரமம் ஏற்பட்ட சூழலில், உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நாக்கு கடிபட்ட நிலையில், கெய்ட்லினுடைய பேச்சு குளறுபடியாக தொடங்கியது. இதையடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தார். அப்போது அந்தப் பெண்ணுக்கு மருத்துவர்கள் சில மாத்திரைகளை பரிந்துரை செய்தனர். கடிபட்டதால் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதினர்.

ஆனால், இதற்கடுத்த நிலையில், வேறு பல சிக்கல்களை கெய்ட்லின் எதிர்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியபோது, “என்னுடைய சருமம் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் மாறிவிட்டது. தோல் உறிந்து கொட்ட தொடங்கியது. என் நாக்கு கருப்பு நிறமாக மாறிவிட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தபோது உடல் உறுப்புகளை வெட்டி அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்’’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கெய்ட்லினுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை கட்டாய கோமா நிலைக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஏனென்றால் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை தக்க வைப்பது, மூச்சுப் பாதையை சீரமைப்பது, உறுப்புகளின் செயலிழப்பை தடுப்பது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள இந்த கோமா நிலை கட்டாயமாகும். போராட்டம் மிகுந்த இந்த சிகிச்சைகளுக்குப் பிறகு இப்போது கெய்ட்லின் குணமாகியிருக்கிறார். தனக்கு இரண்டாவதாக உயிர் கொடுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு அவர் தன் நன்றியை வெளிப்படுத்தினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்