நற்பிட்டிமுனை விளையாட்டுக்கழகம் நடத்திய லீடர் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி

-கல்முனை நிருபர்-

நற்பிட்டிமுனை விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 11 பேர் 20 ஓவர்கள் கொண்ட T-20 லீடர் சம்பியன்ஸ் கிண்ண கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் சம்பியனாக சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டு கழகம் தெரிவானது.

கடந்த சில வாரங்களாக நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியில் தனது குழுவில் மோதிய சகல அணிகளையும் வீழ்த்தி சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.

மறுமுனையில் தனது குழுவில் போட்டியிட்ட சகல அணியினரையும் வீழ்த்தி வெற்றி பெற்ற மருதமுனை மறுகேப்பிட்டல் விளையாட்டுக் கழக அணி இறுதி போட்டியில் பைன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது .

நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது மைதானத்தில் நடைபெற்ற இவ்விறுதி போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19.2 பந்துவீச்சு ஓவர்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் அர்ஷாத், யாஸிர், நஜித் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

இதற்கமைய பதிலுக்கு 142 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட களம் இறங்கிய மருதமுனை மறுகேப்பிட்டல் விளையாட்டுக் கழக அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களையும் எதிர்கொண்டு 08 விக்கட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தனர்.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக பைன் ஸ்டார் விளையாட்டுக்கழக அணி வீரர் சப்ராஸ் மற்றும் தொடரின் நாயகனாக நற்பிட்டிமுனை விளையாட்டுக்கழக வீரர் ஏ.எம். றிலாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ் இறுதியில் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர் உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழவில் நற்பிட்டிமுனை பிரதேசத்திலிருந்து தரம் ஐந்தில் புலமையாளர்களாக தெரிவானோருக்கான கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது.