நகைகளை அடகு வைத்தும் கடன் வாங்கியும் தான் உரங்களை வாங்குகிறோம்!

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு-வாழைச்சேனை கமநல பிரிவிற்குட்பட்ட சேம்பையடி முருக்கந்தீவு மற்றும் பட்டியாவெளி, தவணை நூறு ஏக்கர் கண்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த மே மாதம் 5 ஆம் திகதி சிறுபோக வேளாண்மை செய்கையினை மேற்கொண்டுள்ள போதும் இதுவரை சிறுபோகத்துக்கான உரமானிய கொடுப்பனவும் தமக்கு கிடைக்கவில்லை, என கவலை வெளியிட்டுள்ளனர்.

இன்று அறுவடையும் இடம்பெற உள்ள நிலையில் தங்களுக்கு உரமானிய கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்று கவலை தெரிவிப்பதுடன், தங்க நகைகளை அடகு வைத்தும், அரிசிஆலைகளில் கடன்களை பெற்றும் தான் உரத்தினை கொள்வனவு செய்ததாகவும், தெரிவிக்கின்றார்கள்.

அத்துடன் கடந்த 2023/2024ஆம் ஆண்டுக்கான பெரும்போகத்தில் வேளாண்மை செய்கையில் மழை காரணமாக பாரிய நட்டத்தினை அடைந்ததாகவும் அதற்கான எந்தவித கொடுப்பனவுகளும் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை, என்றும் இவ்வாறு சென்றால் தாங்கள் என்ன செய்வது என்று புரியவில்லை என தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் இரண்டு போகங்களுக்கு இலவச உர மானியம் வழங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்தும் இதுவரைக்கும் எங்களுக்கு செய்கை பண்ணிய சிறுபோக செய்கைக்கு உரமானியம் கிடைக்கவில்லை, இதனை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் இராஜாங்க அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் எடுக்குமாறு விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்