4 மாணவர்களின் சடலங்கள் மீட்பு!
அம்பாறையில் உழவு இயந்திரம் கவிழ்ந்து வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன, தற்போது வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை, பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன், தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர், அத்துடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 04 ஜனாஸாக்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சடலங்களாக மீட்கப்பட்டவர்களில், முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக்(வயது-15), சஹ்ரான்(வயது-15) ஆகியோரர் உள்ளடங்குவதுடன், தஸ்ரிப், யாசீன் ஆகிய மாணவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
மேலும், சம்மாந்துறை நீதிமன்ற பதில் எம்.ரி சபீர் அகமட் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் குறித்த சடலங்கள் மீதான மரண விசாரணையை மேற்கொண்ட பின்னர், சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, காணாமல் சென்ற தஸ்ரிப் என்ற மாணவனின் பாடசாலை புத்தகப்பை மீட்புக்குழுவினரால் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று செவ்வாய்க்கிழமை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானது.
இதன்போது, நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து, சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் 11 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர், இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
இதன்போது, அப்பகுதியில் உள்ள அதிவலு மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு, அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
மேலும், இந்த விபத்தில் 06 சிறுவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர், அத்துடன் நள்ளிரவு தாண்டியதன் காரணமாக மீட்புப்பணி இடைநடுவில் கைவிடப்பட்டது.
அதன் பின்னர் இன்று புதன்கிழமை காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது இச்சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.