திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் தீ விபத்து

இந்தியாவில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக பொறுப்பிற்கு வந்த அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் திருடப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அம்மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், தேவஸ்தான துணை கோயில்கள் மற்றும் சாலைப் பணிகள் தொடர்பான ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.

மேலும் தீ விபத்து பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர், தேவஸ்தானத்தின் அனைத்து ஆவணங்களும் மின்னணு முறையில் சர்வரில் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆவணங்கள் எரிந்துவிட்டதால் பிரச்னை இல்லை எனவும் கூறினார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்