திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் இளநீர் வியாபாரி கசிப்புடன் கைது

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மிகிந்த புரம் (வயது – 42) குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கோயில் கடைத் தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரே இவ்வாறு ஒரு போத்தல் கசிப்புடன் கைதாகினார்.

15 போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு போத்தலுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை செவ்வாய் கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்