திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார, இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சர்வ மத ஆசிர்வாதத்துடன் பதிவியேற்கும் நிகழ்வு இடம் பெற்றது.

அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட முன்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக இவர் கடமையாற்றியுள்ளார்.

புதிதாக கடமைப் பொறுப்பேற்ற அரசாங்க அதிபரை, மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

குறித்த நிகழ்வின் பின்னர் புதிய அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பொதுமக்களின் தேவையினை அவ்வப்போது உரிய நேரத்தில் நிறைவேற்றிக் கொடுப்பதே எனது பிரதான பணியாகும். அதற்கு தேவையான அர்ப்பணிப்பினை உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டு.

கடந்த 30 வருடகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை தன்னால் முடிந்தளவு முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன, மத மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பால் இருந்து எனது பணியை முன்கொண்டு செல்வேன். இந்த மாவட்டத்தில் வாழுகின்ற அனைத்து சமூகங்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சமூகங்களுக்கு எங்களுடைய சேவை நீதியானதாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் விரும்புகிறேன்.

அரசாங்கத்தின், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, அதன் மூலம் இந்த மாவட்டத்தின், அபிவிருத்திக்காகவும், இன ஐக்கியத்திற்காகவும் நான் முழுமையாக உழைப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாராச்சி 2025-01-01 இலிருந்து ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்