தாய் மற்றும் மகள் மீது கத்திக்குத்து : பெண் வேடமிட்டு தப்பிக்க முயன்ற நபர்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை-தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் தாய் மற்றும் மகளை கத்தியால் குத்தி  விட்டு பெண் வேடம் அணிந்து தப்பிக்க முயன்றவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

இதன் போது மூதூரை பிறப்பிடமாக கொண்டு ஈச்சநகர் பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்த 38 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளாகிய 54 வயதுடைய தாய் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையிலும், 31 வயதான மகள் கந்தளாய் தள வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை மேற்கொண்ட நபர் தாக்குதலுக்குள்ளாகிய பெண்ணிடம் கடனுக்கு பணம் பெற்றிருந்த நிலையில் குறித்த பெண் பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற சந்தேகநபர் குறித்த பெண் மற்றும் அவரது மகள் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிக்க முய்னறுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட குறித்த நபர்  முகத்தை மூடி ஹபாயா உடையணிந்து பெண் போன்று  வேடமிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

எனினும் அப்பகுதி மக்களால் அவர் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்