தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நெருக்கீடுகளை ஏற்படுத்த வேண்டாம்
-யாழ் நிருபர்-
தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நெருக்கீடுகளை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மத்திய, மாகாண கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலை என்பது ஒட்டுமொத்த மக்களுக்குமானது. மக்களில் ஓரங்கமாகவே அதிபர், ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இது வெறும் அலுவலக கடமையல்ல. மனித ஜீவன்களோடு பயணிக்கும் கடமை. இந்தக்கடமைகளில் இருந்து அதிபர், ஆசிரியர்கள் விலக முடியாது என்பதனை நாம் உணர்ந்தவர்கள். ஆகையினாலேயே எமது கடமைகளை எவ்வேளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.
இன்று முதல் நாட்டில் உள்ள 300 தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்து, அதனை ஏற்ற போக்குவரத்து துறை சார்ந்தவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அவர்களின் சேவை முடக்கத்தால் பாடசாலைகளுக்கான போக்குவரத்துகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதனால் அதிபர், ஆசிரியர், மாணவர்களின் போக்குவரத்து வழிமுறைகளும் பாதிப்படைந்துள்ளன. இன்று பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாகவே உள்ளது. நாட்டுநிலைமை பதட்டமாக உள்ளது, என தெரிவித்துள்ளது