தனிநபர் சுமந்திரன் ரெலோவை வெளியேற்றுவது எவ்வாறு – சித்தார்த்தன் கேள்வி

-யாழ் நிருபர்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தனிநபர் சுமந்திரன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவை எவ்வாறு வெளியேறுமாறு கூற முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பினார்.

இன்று கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரெலோ அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக விளங்குகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தனிநபராக இருக்கின்ற சுமந்திரன் ஒரு கட்சியை வெளியேறுமாறு கூறுவதற்கு அருகதை அற்றவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலர் பலவீனப் படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தினால் தமிழ் மக்களை பலவீனப் படுத்துவதாக அமையும்.

சுமந்திரனின் கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தனிநபர் ஒருவருடைய கருத்து ஆகவே பார்க்க முடியும்.

ஆகவே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை பங்காளி கட்சிகள் விரைவில் சந்தித்து எமது கண்டனத்தை தெரிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.