தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பு : நகை கடை உரிமையாளர்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்-

நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள் உள்ளடங்களாக நகை தொழிலகங்களில் பணிபுரியும் ஊழியர்களும் விற்பனை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

விலைவாசி அதிகரிப்பு, பொருட்களுக்கான தட்டுப்பாடு, வருமானம் இன்மையால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையால் நகை கொள்வனவுகள் பாரிய அளவில் குறைவடந்துள்ளதாகவும் மன்னார் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து 24 கரட் தங்கம் ஒரு லட்சத்து ஐம்பத்து எட்டாயிரம் தொடக்கம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வரையில் அதிகரித்துள்ளமையினால் மக்கள் நகை கொள்வனவுகளில் ஆர்வம் காட்டுவதை தவிர்த்து வருவதாகவும் இதனால் விற்பனை சடுதியாக குறைந்துள்ளதாகவும் நகை விற்பனை நிலைய உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் தொடர்ச்சியாக விற்பனை நடவடிக்கை குறைந்து உள்ளமையினால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், நகை விற்பனை நிலையங்களுக்கான மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வாடகை பணம் செலுத்துவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி மற்றும் தங்க விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட நகை விற்பனை நிலைய உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.