சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா – சென்னை விமான நிலையத்துக்கு இன்று திங்கட்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான வெடிகுண்டு மிரட்டல் 2 வாரத்தில் 5 வது முறையாக விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று திங்கட்கிழமை அதிகாலையில், மெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, வெடிகுண்டுகள் கண்டறியும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர், பொலிஸார் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையம் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு சோதனைகள் நடத்தப்பட்டன

.வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்பட்ட வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி சோதனை செய்தனர்.

இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில்,

“சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ச்சியாக வருகிறது. இதுவரை தொலைபேசி மற்றும் இ-மெயில் மூலமாக 5 முறை மிரட்டல் வந்துள்ளன.

வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது. இதனால் விமான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்”, என அதிகாரிகள் தெரிவித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்