சீனாவை காட்டிலும் இந்தியாவால் நன்மை: ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

-யாழ் நிருபர்-

தமிழ் மக்களுக்கு சீனாவைக் காட்டிலும் இந்தியாவாலே அதிக நன்மை கிடைப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்மாணம் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியாவும் சீனாவும் தொடர்ச்சியான உதவிகளைச் செய்து வருகிறது.

சீனாவின் உதவிகள் வெறுமனே அபிவிருத்தியை நோக்கியதாகக் காணப்படுகின்ற நிலையில் இந்தியாவின் உதவிகள் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான உதவிகளாகப் பார்க்க முடியும்.

ஏனெனில் இந்தியா எமது தொப்புள் கொடி உறவாகக் காணப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதாரம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றுடன் நெருங்கிய உறவினை இந்தியா பேணி வருகிறது.

அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு எமது அயல் நாடான இந்தியாவால் மட்டும் முடியும்.

ஆகவே தமிழ் மக்கள் இந்தியாவுடன் கொண்டுள்ள உறவு தொப்புள் கொடி உறவாக காணப்படுகின்ற நிலையில் அது பற்றி யாரும் சந்தேகப்பட வேண்டியது இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்