திருகோணமலை பொதுவைத்தியசாலை சிற்றூழியர்களின் மனிதாபிமான செயல்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பொதுவைத்தியசாலை சிற்றூழியர்களின் மனிதாபிமான செயல்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளர்களை அனுமதிக்கும் இடத்தில் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் வீல்ச் செயார் (சக்கர நாற்காலி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் பல வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அதிகளவிலான நோயாளர்கள் இவ்வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் குறித்த நோயாளர்கள் அனுமதிக்கும் இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகள் தேவைப்படுகின்ற போதிலும் அனைத்து சக்கர நாற்காலிகளும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதுடன், உடைந்தும் காணப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக பொறுப்பான பிரிவில் கடமையாற்றும் ஊழியர்கள் தங்களது மேற்பார்வையாளர்களிடம் முறையிட்ட போதிலும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் புதிய சக்கர நாற்காலிகளை கொள்வனவு செய்ய நிதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும், உடைந்த நிலையில் இரும்புக்காக விற்பனை செய்யப்படவிருந்த குறித்த சக்கர நாற்காலிகளை களஞ்சியசாலையில் இருந்து பெற்றுக்கொண்டு, தங்களுடைய முயற்சியினால், நோயாளர்களின் நலன் கருதி குறித்த பிரிவிற்கு பொறுப்பாக இருக்கின்ற சிற்றூழியர்கள் சக்கர நாற்காலிகளை திருத்தி, நிறம் பூசி பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், நோயாளர்களுக்கு தேவையான வீல்ச் செயார்கள் (சக்கர நாற்காலிகள்) தட்டுப்பாடாக காணப்படுகின்றது.
நோயாளர்களின் நலன் கருதி தங்களால் இயன்ற சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக குறித்த சிற்றூழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்