சாஹிரா கல்லூரி மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்,  அது தொடர்பான நடவடிக்கைகளை பரீட்சை ஆணையாளர் நாயகம் முன்னெடுத்து வருகிறார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய இடையீட்டு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இது தொடர்பாக என்னிடம் தெரிவித்தார்.

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது.

பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரகாலத்துக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த சபையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இதுவரை பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை. அதனால் அந்த மாணவிகளுக்கு அநீதி ஏற்படாமல் அவர்களின் பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு கல்வி அமைச்சர் பதிலளிக்கையில்,

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் என்னிடமும் தொலைபேசியில் கலந்துரையாடினார். பரீட்சை மண்டபத்துக்குள் பர்தா அணிந்து வருவதாக இருந்தால், இரண்டு காதுகளும் தெரியும் வகையில் இருக்கவேண்டும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதனை இந்த இடத்தில் நான் தெரிவிக்கவில்லை. இந்த விடயங்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களும் இருக்கின்றன. அது தொடர்பாகவும் தற்போது நான் ஒன்றும் தெரிவிக்கப்போவதில்லை.

இந்த விடயம் காரணமாகவே இவ்வாறு பரீட்சை பெறுபேறு இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தை யாராே ஒரு ஒழுக்காற்று அதிகாரி ஒருவர் அளவுக்கு அதிக வகையில் இதனை எடுத்துக்கொண்டுள்ளார்.என்றாலும் மாணவர்களின் பெறுபேறுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்து வருகிறது, பரீட்சைகள் ஆணையாளர் இன்னும் சில தினங்களில் அதனை வெளியிடுவார்,  என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்