சாரதி அனுமதி பத்திரம் இரத்தான சாரதி : கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவிகள் உயிரிழப்பு!
கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியாக செயற்பட்ட நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் 5 மாதங்களுக்கு தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இவர் கடந்த ஒகஸ்ட் மாதம் 4ஆம் திகதி காலி – லபுதுவ பகுதியில் மதுபோதையில் பேருந்தைச் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் அவரது சாரதி அனுமதிப்பத்திரமும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில், அக்மீமன பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை காலி மேலதிக நீதவான் நீதிமன்றுக்கு நகர்த்தல் பத்திரம் ஊடாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, உடுகம – தம்மல பகுதியைச் சேர்ந்த குறித்த சாரதி தமது அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தமது அனுமதிப்பத்திரம் காணாமல் போயுள்ளதாக ஹினிதும பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து வேறொரு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதாக பொலிஸார் மன்றில் அறிவித்தனர்.
பதுளை – அம்பகஹஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தின்போதும் குறித்த சாரதியிடம் அவ்வாறு மோசடியாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரமே இருந்ததாக தெரியவந்துள்ளது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த காலி மேலதிக நீதவான் லக்மினி கமகே, குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கைப்பற்றி அதனை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் பதுளை மஹியங்கனை வீதியில் அம்பகஹஓயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவிகள் உயிரிழந்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட 27 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்