சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார் சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் ஜனாதிபதியும் இருப்பதால், முன்னாள் அரசாங்கம் கையெழுத்திட்ட சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, மக்கள்சார் உடன்பாட்டை எட்டுவதற்குக் கவனம் செலுத்த வேண்டும் என இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உயர் மட்டக் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர், துணைப் பிரதானி, வதிவிடப் பிரதிநிதி திருமதி மார்த்தா வோல்டெமிகல் மற்றும் வபதிவிடப் பொருளாதார நிபுணர் மானவி அபேவிக்ரம ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.