சட்டவிரோத மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

-அம்பாறை நிருபர்-

காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துபவர்கள் தலைகவசம் அணியாமல் வாகனம் செலுத்துவோர் , வாகன அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துவோர் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுவர் என காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் தெரிவித்தார்.

அம்பாறை  மாவடிப்பள்ளி ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை  பள்ளிவாசலுக்கு வருகை தந்த அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்தல், இரவு நேரங்களில் இளைஞர்கள் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல் , வீதியில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தல் போன்ற ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் என மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து மக்களுக்கு இடையூறு விளைவித்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் வீதிகளில் கூடி நிற்கும் வாலிபர்கள் சம்பந்தமாகவும் மற்றும் போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் மேற்படி நபர்களுக்கு எதிராக பள்ளி நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பூரண தெளிவினை வழங்கினார்.

இதேவேளை காரைதீவு பொலிஸ் பிரிவின் மாவடிப்பள்ளி பிரதேசத்திலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். ஆபத்துக்களை விளைவிக்கும் வகையில் போக்குவரத்து மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் பறிமுதல் செய்யவுள்ளதாக அவர் சுட்டிகாட்டினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM