கோவிட் குறித்த தரவுகளை சீனாவிடம் மீண்டும் கோரும் உலக சுகாதார நிறுவனம்
சீனாவின் வுஹான் நகரில் கோவிட் தொற்றுநோய் பரவ ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் அதன் தோற்றம் குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது ஒரு தார்மீக மற்றும் அறிவியல் கட்டாயமாகும் என்று உலக சுகாதார மையம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாடுகளுக்கு இடையே வெளிப்படைத்தன்மை, பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்கால தொற்றுநோய்களுக்கு உலகத்தால் போதுமான தயார் நிலையை உருவாக்க முடியாது என்றும் உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.
பல விஞ்ஞானிகள் கோவிட் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இயற்கையாகவே பரவியதாக நினைக்கிறார்கள்.
ஆனால் அது வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டதாக சில சந்தேகங்கள் தொடர்கின்றன.
மேலும் உலக சுகாதார மையத்தின் புதிய கோரிக்கைக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.
தகவல்களின்படி சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் தொற்று பரவிய செய்தி 2019 டிசம்பர் 31ஆம் திகதி வெளியானது.