
கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் விசம் கொடுத்த சம்பவம் : 7 சந்தேகநபர்கள் கைது
கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலஹா, தெல்தோட்டை பகுதியில் வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொலைச் சந்தேக நபர்கள் இருவரை சந்திக்க சென்ற ஒருவர் அவர்களுக்கு சயனைட் கலக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு பால் பக்கற்றுகளை வழங்கியுள்ளார்.
அதனை அருந்தியதையடுத்து சுயநினைவிழந்த குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.