
கொள்ளை சம்பவம் தொடர்பில் முறைப்பாடு: இளைஞன் மீது வாள் வெட்டு
கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது.
யாழ் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்திபன் (வயது – 30) எனும் இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த தாக்குதலுக்கு இலக்கான குறித்த இளைஞனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், ஐஸ்கிறீம் வாங்குவது போல பாசாங்கு செய்து, இளைஞனின் உடைமையில் இருந்த விற்பனை பணம், மற்றும் கைபேசி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்று இருந்தனர்.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இளைஞன் முறைப்பாடு செய்த பின்னர் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை, அல்வாய் பகுதியில் இளைஞனை வழிமறித்த கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்