கொலை வழக்கில் சிக்கிய நடிகை

இந்தியாலில் கொலை வழக்கில் கைதாகி பொலிஸ் நிலையத்தில் இருக்கும் நடிகை பவித்ரா கவுடா அது தொடர்பான எந்த வருத்தமும் இல்லாமல் சிரித்துகொண்டே மேக்கப்புடன் வலம் வந்த காட்சி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காமாட்சி பாளையா சாலையோரத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த இளைஞர் பெயர் ரேணுகா சுவாமி என்றும், கன்னட திரையுலகின் பிரபல நடிகரான தர்ஷன், ஆள்வைத்து அவரைக் கொன்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பொலிஸாரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. ஏற்கெனவே திருமணமான நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடாவுடன், கடந்த 10 ஆண்டுகளாக தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகா சுவாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவித்ரா கவுடா குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த நடிகை பவித்ரா கவுடா இதுகுறித்து நடிகர் தர்ஷனிடம் புகார் தெரிவிக்க, கோபமடைந்த தர்ஷன் ஆள் வைத்து ரேணுகா சுவாமி அழைத்து வந்து அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகை பவித்ரா கவுடாவை, பெங்களூருவில் குற்றம் நடந்த இடத்தைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வதற்காக கடந்த ஜூன் 15 அன்று, போலீசார் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது ​​பவித்ரா கவுடா தனது இல்லத்திலிருந்து காவல்துறை அதிகாரிகளுடன் திரும்பி வரும்போது லிப்ஸ்டிக் உள்ளிட்ட மேக்கப் போட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டே வெளியே வந்துள்ளார்.

இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சிறைக் கைதிக்கு மேக்கப் போட்டுக்கொள்ள அனுமதி அளித்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதுதொடர்பாக டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் எஸ்.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் பவித்ரா கவுடா அது தொடர்பான எந்த வருத்தமும் இல்லாமல் சிரித்துகொண்டே வலம் வருவது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்