கொரோனா இடைத்தங்கல் முகாமில் பல லட்சம் ரூபா மோசடி
-யாழ் நிருபர்-
யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று கொரோனா இடைத்தங்கல் முகாமில் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கணக்கு அறிக்கையில் இடம் பெறாமல் மாயமாக சென்றுள்ளது.
யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்த காலப்பகுதியில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கும் பிற மாவட்டங்களிலிருந்து கொரோனா என இனங்காணப்பட்டவர்களை தனிமைப் படுத்துவதற்காக மருதங்கேணியில் நாவற்குழி மற்றும் வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட்டது
வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் குறித்த கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள் செயற்படுத்தப்பட்டன.
இவ்வாறான நிலையில் குறித்த மருதங்கேணி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரம் என பல பொருட்கள் பல மில்லியன் ரூபா செலவில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் யாழில் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் இடைத்தங்கல் நிலையங்கள் அகற்றப்பட்டது.
குறித்த இடைத்தங்கல் நிலையங்கள் அமைக்கப்பட்ட போது வழங்கப்பட்ட பல மில்லியன் ரூபா பொருட்கள் அதனை அப்புறப்படுத்திய போது கணக்குப் புத்தகத்தில் வரவிடப்படாமல் மாயமாகியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்ட நிலையில் மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மருதங்கேணி வைத்தியசாலை தொடர்பில் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டபோது சுகாதார அமைச்சு மற்றும் இராணுவத்தால் வழங்கப்பட்ட பல மில்லியன் ரூபா பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியுள்ளதாக அறியக் கிடைத்தது.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த 24ஆம் திகதி யாழ் பிராந்திய சுகாதார பணிமனையின் கணக்காளர் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்திற்கு இதுவரை பதில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது.
அகவே வடக்கு மாகாண சுகாதார சேவை பணிமனையில் பல ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது