கொரிய மொழி பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு

தென் கொரிய தொழிலுக்காக இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 2022 ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை மே 23 திகதியன்று ஆரம்பமானது. இலங்கையில் நடத்தப்படும் ஐந்தாவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை இதுவாகும்.

2022ஆம் ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சைக்குத் 31,378 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி தினமும் 4 குழுக்கள் கணினி அடிப்படையிலான பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பன்னிபிட்டிய கணினி நிலையத்தில் பரீட்சை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சை முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் மற்றும் முதல் 7,000 விண்ணப்பதாரர்களின் முடிவுகள் ஜூலை 5 ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ளது. கொரியா மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினால் தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை தேர்வு செய்யும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் (சர்வதேச விவகாரங்கள்) மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்