குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்

நுவரெலியா ஏப்ரல் வசந்த கால நிகழ்வு ஆரம்ப வைபவத்தில், பலாத்காரமாக நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி இடையூறு செய்த குழுவினருக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தெரிவித்துள்ளார். பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்காவிட்டால், நுவரெலியா மாநகரசபை உறுப்பினர்கள் மாநகரசபை ஊழியர்களுடன் இணைந்து, வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.

மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நுவரெலியா மாதாந்த பொது கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நுவரெலியா நகரம் ஒரு சுற்றுலா நகரம் இங்கு அதிகமானோர் சுற்றுலாத்துறையை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றார்கள். அதிலும் வருடம் தோறும் ஏப்ரல் மாதத்திலே அதிக வருமானம் தேடும் காலமாகும். ஏப்ரல் மாதத்தில் பெருந் தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தரும் பொழுது இங்குள்ள சுற்றுலா விடுதிகள் ஹோட்டல்கள் உரிமையாளர்களும் பழங்கள்,மரக்கறி வியாபாரிகள் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் ஒரு வருமானம் தேடும் மாதமாகும்.

இவ்வாறு நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக பொழுபோக்கிற்காக இங்கு பல கலை, கலாச்சார விளையாட்டு போட்டிகள், குதிரைப்பந்தய போட்டி, காரோட்டப்போட்டி,மலர் கண்காட்சி போட்டிகளை நடத்வதற்கான ஏற்பாடுகளை நுவரெலியா மாநகரசபையினர் செய்துள்ளனர்.

இதனை குழப்பியது நுவரெலியா சுற்றுலாத்துறையினரின் வயிற்றில் அடிக்கும் மிலேச்சதனமான செயலாகும். எனவே இதுவரையிலும் இவ்வாறான சம்பவம் நடைபெறவில்லை. ஆகையால் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது நுவரெலியா பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Minnal24 வானொலி