குழந்தை தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த வேளை திடீரென தீப்பற்றி எரிந்த வீடு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகிநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வீடு தீ பிடித்து எரிந்துள்ளது.

சமையலில் ஈடுபட்டிருந்த பெண் மீனை வெட்டுவதற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்று மீனை வெட்டிக் கொண்டிருந்த பொழுது, திடீரென வீடு தீப்பற்றி எரிந்ததை அவதானித்த அவர், ஓடிச் சென்று தொட்டிலில் படுத்துறங்கிய அவரது பிள்ளையை தூக்கிக் கொண்டார்.

இதன்பின் அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் வீடு முற்றாக எரித்துள்ளது .

இதன் போது வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், அலைபேசி, 2 மீன் பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்பொழுது இடமின்றி அயலவர் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்  தெரிவிக்கையில்,

தமக்கென நிரந்தர வீடு வழங்கப்பட்டிருந்த போதிலும் அவ்வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில்,  இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், இருப்பதற்கோர் இடமின்றி தற்காலிக வீடு ஒன்றை அமைத்து வசித்து வந்ததாகவும், தற்பொழுது அதுவும் தீயில் எரிந்து இல்லாமல் போய் உள்ளதாக, கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்