குழந்தையின் உயிரை பறித்த மண்ணெண்ணை!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில், ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று, மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாயார் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை, குழந்தை மண்ணெண்ணெயை எடுத்து குடித்துவிட்டு, உடலிலும் பூசி விளையாடிக் கொண்டிருந்தது.

இதை அவதானித்த தாயார், ஓடிச்சென்று குழந்தையை தூக்கிய போது, குழந்தை மயக்கமடைந்துள்ளது.

நண்பகல் 1 மணியளவில் குழந்தை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிற்பகல் 4 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்