குளங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு: 37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு
-அம்பாறை நிருபர்-
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் குளங்கள் மற்றும் நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி தெதுறு ஓயா, நில்வளா கங்கை, களனி கங்கை, மகாவலி கங்கை, யான் ஓயா, மல்வத்து ஓயா, மகா ஓயா, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நிக்கவரட்டிய, சிலாபம், ஆராச்சிகட்டுவ, பிங்கிரிய, வாரியாபொல, கொபெய்கனே உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், நாட்டிலுள்ள 73 பிரதான குளங்களில் 37 குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள ஏனைய குளங்களில் நீர்மட்டம் 77 சதவீதத்தைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.