Last updated on December 2nd, 2024 at 01:30 pm

கிழக்கின் கல்வி ஒளிக்காக முன்னுதாரணமாகச் செயற்பட்ட கலைமகளை வாழ்த்துகிறோம்

கிழக்கின் கல்வி ஒளிக்காக முன்னுதாரணமாகச் செயற்பட்ட கலைமகளை வாழ்த்துகிறோம்!

கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாருக்கு மட்டக்களப்பு கல்விச் சமூகம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்விச் சமூகம் சார்பாக மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்தவாழ்த்து செய்தியில்,

அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுஜாதா குலேந்திரகுமார் அம்மணி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

கல்விக் களத்தில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி, மாறுபட்ட நிலைகளில் அவரின் அருமைமிகு தலைமைத்துவத்தினால் பலரை ஊக்குவித்து உன்னதமான சேவையாற்றிய பெரும் மதிப்பும் அன்பும் நிறைந்த அம்மணி அவர்களுக்கு எங்கள் அன்பும் பெரும் மதிப்பும் உரித்தாகும்.

கணித ஆசிரியராக ஆரம்பித்து, அதிபராகவும், கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராகவும், மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் ஆற்றிய அவருடைய அர்ப்பணிப்பு மிகு சேவை, எங்களது மாணவர்களின் கல்வி உயர்வுக்கு அடித்தளமாய் அமைந்துள்ளது.

தற்போது SLEAS 1 (SLEAS I Special Grade) விசேட தரத்தில் உயர்வு பெற்று,Addl. Commissioner General of Education Publications என்ற உன்னதம்மிகு பொறுப்புக்கு நியமனம் பெற்றிருப்பது எமது மட்டக்களப்புக்கும் கிழக்குமாகாணத்திற்குமான பெருமைக்குரிய விடயமாகும்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவர்கள் அர்ப்பணித்து ஆற்றிய உழைப்பு, அவர்களுக்கான வரலாற்றுச் சான்றாதாரமாகும். அவரின் ஊக்கத்தால் அதிபர்களும் ஆசிரியர்களும் புதிய உயர் இலக்குகளை நோக்கி செல்வதற்கு வழிவகுத்துள்ளார்.

கல்வி என்பது முறைமையை மட்டுமே சார்ந்ததாக இல்லாது, சமூகமெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என எண்ணி பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூகப் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைத்து கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய அவருடைய சேவையை பாராட்டாது இருக்க முடியாது.

பாடசாலைகளின் முன்னுதாரண செயற்பாடுகளை உடனுக்குடன் பாராட்டி, மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வர அவர் அயராது எடுத்த முயற்சிகள் இன்று பலத்த நேர்மயமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வேலை நேரத்தைத் தாண்டி , இரவுநேரங்களில் இடம்பெறும் விசேட வகுப்புகளை நேரில் பார்வையிட்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவித்த அவருடைய உழைப்பினால் எமது மாணவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறியுள்ளன.

மாணவர்களின் பெறுபேறுகள் வெளிவரும் ஒவ்வொரு தருணத்திலும் நேரடியாக அவர்களுடன் ஒருமித்தமையாக உறவாடி, அவர்களின் முயற்சிகளை கண்ணியப்படுத்திய அவருடைய செயல்கள், மாணவர்களுக்கு மாத்திரமல்லாமல் அல்லாமல் சமுதாயத்திற்கே உந்துச்சக்தியாக இருக்கின்றன.

பல்துறை ஆளுமையாளரான அவருடைய ஆக்கப்பூர்வ சிந்தனை, தனித்துவமான தலைமைத்துவ பண்பு, மற்றும் நேர்மயமான செயற்பாடுகள் மூலம் அவர் எங்கள் மனங்களை வென்றதோடு, நமது கல்வித்துறையின் தனித்துவமான அடையாளமாக திகழ்கின்றார்.

இந்த புதிய பொறுப்பில் அவர் மேலும் உயர்ந்த இலக்குகளை எட்டுவார் என நம்புகிறோம். அவர் ஆற்றிய உன்னதமான சேவைகளை உளமாரக் கௌரவிக்கின்றோம். இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பும் மரியாதையும் கொண்டு,
அவரை ஆத்மார்த்தமாக வாழ்த்துகிறோம்.

நீங்கள் எங்கே சென்று சேவை புரிந்தாலும் அங்கெல்லாம் உங்கள் தனித்துவமான அடையாளமான வெற்றியை பதிக்க இப்போதும் எப்போதுமாய் எங்கள் வாழ்த்துக்கள், என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்