காளானை உட்கொண்ட 13 பேர் உயிரிழப்பு

அசாமில் விஷக்காளான்கள் உட்கொண்டு 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் , பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விஷக் காளான்களை உட்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட உடல் நலக்குறை காரணமாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒன்பது பேரும் திங்கட்கிழமை நான்கு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலம் திப்ருகார், ஷிவசாகர், தின்சுஹியா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் காளான் விளையும் காலப்பகுதியாக உள்ள நிலையில் இவற்றினை பறித்து வீட்டிற்கு எடுத்துச்சென்ற சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

காளானை உட்கொண்ட 35 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர்கள் அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.