காத்தான்குடியில் சகல பிரத்தியேக வகுப்புகளையும் உடனடியாக நிறுத்துமாறு அறிவித்தல்!

சகல பிரத்தியேக வகுப்புகள் நடாத்தும் நிறுவனங்கள், ஆசிரியர்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதியில் பிரத்தியேக வகுப்புகள் நடாத்தும்
தாங்கள் நிறுவனத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற பிரத்தியேக வகுப்புகளை உடனடியாக நிறுத்துமாறு தயவுடன் அறியத் தருகின்றேன்.

தற்பொழுது உள்ள காலநிலை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய நோய் தாக்கங்கள் தொடர்பாக விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டிய தேவை உள்ளதுடன் குறிப்பாக மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் வெளியிலே செல்லும்போது வெள்ளம் வடிந்து ஓடிய பகுதிகள் மற்றும் தேங்கி நின்ற பகுதிகள் என்பனவற்றின் ஊடாக நோய் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஏற்கனவே பாடசாலைகளும், உயர்தர பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலைமையில் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்கையில் பல சுகாதார பிரச்சனைகளை மாணவர்கள் எதிர் நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் தனியார் நிறுவனங்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன், என தெரிவித்துள்ளார்.