-மூதூர் நிருபர்-
திருகோணமலை முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுவரும் சூரிய சக்தி மின்வலு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த காணிகளை விவசாயிகளுக்கு மீள வழங்கக் கோரியும் முத்துநகரின் ஒன்றிணைந்த விவசாய சம்மேளனங்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட முத்துநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள அம்மன்குளம் விவசாய சம்மேளனம், தகரவெட்டுவான் விவசாய சம்மேளனம், முத்துநகர் விவசாய சம்மேளனம், மத்தியவெளி விவசாய சம்மேளனம் ஆகிய விவசாய சம்மேளனங்களினுடைய விவசாயிகள் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது வயிற்றுப் பசிக்கு சோலர் பவரா? , அழிக்காதே அழிக்காதே வாழ்வாதாரத்தை அழிக்காதே, ஏழை விவசாயிகளை சுரண்டாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் இராஜசேகர், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பிரதேச செயலாளர் மதிவண்ணன் ஆகியோரிடம் கையளித்தனர்.
இதன்போது குறித்த காணிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் திட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு கடந்த மார்கழி மாதம் 24ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் உங்களுடைய காணிகளை உங்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போது இணக்கப்பாட்டளவில் முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் விரைவில் குறித்த காணிகளை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் அக்மீமன மக்களிடம் உறுதியளித்தார்.
குறித்த சூரிய சக்தி மின்வலு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் அம்மன் குளம், சின்ன அம்மன் குளம், தகரவெட்டுவான் குளம், முத்துநகர் குளம், மத்தியவெளி குளம் ஆகிய ஐந்து சிறு குளங்கள் உட்பட 1600 ஏக்கர் விவசாய நிலங்களும், 1200 விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் எனவும் மேலும் 50 ஏக்கர் மேட்டு நில உப உணவுப் பயிர்களும் செய்கை பண்ணப்பட்டு 4200 தொடக்கம் 5000 பயனாளிகள் பயனடைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் தகரவெட்டுவான் குளம் புணரமைக்கப்பட்டு 80வீத பணிகள் நிறைவுற்றிருந்த நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையினர் அதனை நிறுத்தியிருந்ததோடு அன்மன் குளத்தின் திருத்தத்தை தடுத்து நிறுத்தியிருந்தனர். இதனால் குளத்தின் நீர் வீண்விரையமாகி வேளான்மை அழிவுற்று வருகின்ற நிலையில் வயல் நிலங்களை சூரிய சக்தி மின்வலு திட்டத்திற்கு வழங்கியுள்ளதோடு இவ்வருட இறுதிக்குள் அத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறியக்கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஒவ்வொரு வருடமும் பெரும்போகத்தின் மூலம் அறுவடை செய்யப்படுகின்ற 112000 நெல் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் ஜீவனோபாயமும் பாதிக்கப்படும் எனவும் எனவே இந்த வயற்காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தி வேளான்மையை தொடர்ந்து செய்கை பண்ண நிலங்களை விடுவித்துத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.