மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசம் காட்டு யானைகளால் கடுமையாக பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை, விவேகானந்த புரம், போன்ற பல கிராமங்கள் இவ்வாறு பாதிக்கப்படுகின்றது.
பெரும்போக நெற்பயிர்ச்செய்கையை அறுவடை செய்ய ஓர் இரு வாரங்கள் காணப்படும் நிலையில் தினமும் காட்டு யானைகளால் தமது இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்படுவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பிரதேச மக்களின் வீடுகள், வேலிகள் போன்றவற்றையும் பாரிய தென்னை மரங்களையும் காட்டு யானைகள் துவம்சம் செய்வதையும் அவதானிக்க முடிகிறது.
தளவாய் காட்டினை அண்மித்த காட்டு சூழலில் தங்கியிருக்கும் 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகளால் கால்நடைகள் பாதிப்படைவதாகவும், இப் பிரதேசத்தில் பல்வேறு மனித உயிரிழப்புகள் நிகழ்வதாகவும், மேலும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் தினமும் யானைகளை வெடி கொளுத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பினாலும் மீண்டும் மீண்டும் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இதனால் வயல் நிலங்களை பாதுகாப்பதற்கு விவசாயிகள் உயரமான மரங்களில் பரண் அமைத்து பல்வேறு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இராப்பகலாக காவல் காப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.